சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, சென்னையில் வாகன நெரிசல் இன்றி, ஏராளமான முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுவாக, சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் சாலைகளும் இன்று வாகனங்கள் இன்றி வெறிச்சோடி இருக்கின்றன. குறிப்பாக, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.இதே போல், நேற்றைய தினம் இரவு வரை, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற மக்களால் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், ஜிஎஸ்டி நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால் இன்று அந்த சாலைகள் முழுவதும் ஆள் அரவமின்றி இருந்தன. இன்று தைப்பொங்கல், நாளை மாட்டுப்பொங்கல் நாளை மறுநாள் காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் நாளை மாட்டுப்பொங்கல் என்பதால், நாளை வரை சென்னையில் பெரும்பாலான சாலைகள், இவ்வாறு வெறிச்சோடியே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Be the first to comment