சென்னை: சாலையில் மழைநீர் தேங்கி இருந்ததால், பள்ளம் இருப்பது தெரியாமல் சென்ற கார் தண்ணீரில் மூழ்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.’டிட்வா’ புயலால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் உள்ள அனைத்து சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று காலை முதலே பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. இதனால், வேலப்பன்சாவடி அருகே இருக்கக் கூடிய சர்வீஸ் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி, குளம்போல் காட்சி அளிக்கிறது. மேலும், இந்த சர்வீஸ் ரோட்டில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில், அந்த வழியாக வந்த கார் ஒன்று, சாலையில் தேங்கி இருந்த நீரில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிக்கியது. அப்போது, கார் ஓட்டுநரும் நீண்ட நேரமாகக் காரை பள்ளத்திலிருந்து எடுக்க முயன்றார். ஆனால், கார் மெல்ல மெல்ல நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளது. அதனால், பதறிய அந்த இளைஞர் சிறிதும் தாமதிக்காமல் காரில் இருந்து வெளியேறினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.மேலும், தேங்கக்கூடிய மழைநீரில் வாகனங்கள் மூழ்குவதால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Be the first to comment