சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியது குறித்து பாஜக தேசிய தலைமைத் தான் பதில் அளிக்கும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தீரன் சின்னமலை வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு அவர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்.சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையில் சின்னமலையை எடுத்துக் கொண்டதாக சவால்விட்டவர் தீரன் சின்னமலை. தீரன் சின்னமலை புகழ் தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரும் ஊக்கமாக அமையும். வெள்ளையர்களை எதிர்த்து துணிவுடன் போரிட்டவர். தமிழகத்தில் இருந்து வெள்ளையர்களை எதிர்த்து போரிட்ட தலைவர்கள் அதிகம். அவர்களில் மிகவும் முக்கியமாக குறிப்பிடத்தக்கவர் தீரன் சின்னமலை. அவர் இந்த சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் எண்ணில் அடங்காதது. அவரை போற்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்" என்று எல்.முருகன் கூறினார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்த கேள்விக்கு, "இதுகுறித்து தேசிய தலைமை தான் பதில் அளிக்கும்" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
Be the first to comment