தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள மருதூர் அணைக்கட்டு பகுதியில் இருந்து 35 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தாமிரபரணி ஆற்றில் வரும் வெள்ள உபரி நீரின் அளவு மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணைக்கட்டிற்கு தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு சுமார் 20,000 கன அடி வெள்ள உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. காரையார் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 12,000 கன அடியும் மணிமுத்தாறு அணையில் இருந்து சுமார் 4,000 கனஅடியும் வெள்ள உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து திறந்து விடப்பட்ட வெள்ள உபரிநீரையும் சேர்த்து மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 33,000-ல் இருந்து 35,000 கன அடி வரை வெள்ள உபரி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Be the first to comment