திண்டுக்கல்: நத்தம் அருகே திருமலைக்கேணியில் அமைந்துள்ள காயாங்கொடை கருப்பசாமி கோயிலில், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புரட்டாசி மாத திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது தனிச்சிறப்பாகும். மகாளய அமாவாசையை முன்னிட்டு, புரட்டாசி மாதத்தின் கடைசி வெள்ளியன்று நள்ளிரவில் அரண்மனை கிடா வெட்டப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த 300-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு, அவற்றின் கறி சுத்தம் செய்யப்பட்டு, பாறையைச் சுற்றி தடுப்பு கம்பி வேலியால் பாதுகாக்கப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்டது. அதிகாலையில் சுவாமிக்கு கறி படையலிடப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல், திருமலைக்கேணி, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆண் பக்தர்களுக்கு வரிசையாக கறி பிரசாதமாக வழங்கப்பட்டது. மேலும், கறி விருந்தும் வைக்கப்பட்டது. இந்த விநோத திருவிழா, பாரம்பரிய முறைப்படி ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் நடைபெற்று, பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக, கறி பிரசாதமாக வழங்கப்படுவது தங்களுக்கு ஆன்மீக அனுபவத்தை வழங்குவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
Be the first to comment