மயிலாடுதுறை: கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு, காவிரி துலா கட்டத்தில் ஆதீனம் மடாதிபதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா உற்சவம் புகழ்பெற்றதாகும். அந்த வகையில், அக்.18-ம் தேதி தொடங்கிய தீர்த்தவாரி 30 நாட்களாக நடைபெற்று வந்தது. கடைசி 10 நாள் உற்சவம் சிவாலயங்களில் நவ.7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஓலைசப்பரம், திருக்கல்யாணம், தேரோட்டம் என நடைபெற்று வந்த நிலையில், நிகழாண்டு கடைமுகத் தீர்த்தவாரி உற்சவம் இன்று மதியம் 2.30 மணியளவில் காவிரி துலா கட்டத்தில் நடைபெற்றது.இந்த தீர்த்தவாரி உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம் மடாதிபதி 24-வது சந்நிதானம், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27-வது குருமகா சன்னிதானம், ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, கடை முழுக்கு எனப்படும் கடை முகத்தீர்த்தவாரி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்த வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் ஒரே நேரத்தில் புனித நீராடினர். அதற்காக, மயிலாடுதுறை முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் 280 போலீசார், தீயணைப்புத் துறையினர், ஊர்காவல் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், சிசிடிவி, நீச்சல் வீரர்களுடன் படகு, பக்தர்களுக்கு உடை மாற்றும் அறைகள், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி என அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
Be the first to comment