திருப்பூர்: திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை கோடாங்கிபாளையம் பிரிவில் கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லடம் அருகே திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை வழியில் உள்ள ஆராக்குளம் பிரிவில் சாலை விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு டிவைடர்களை அமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த நெடுஞ்சாலையில் நேற்று மதியம் கார் ஒன்று பல்லடத்தில் இருந்து ஆராக்குளம் செல்வதற்காக கோடாங்கிபாளையம் பிரிவுக்குள் டிவைடர் திறப்பு வழியாக வலது புறமாக திரும்பியது. அப்போது, கோவையில் இருந்து பல்லடம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் டிவைடரை கடந்து காரை கவனிக்காமல் தொடர்ந்து வேகமாக வந்துள்ளார். அதனால், கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். ஆனால், கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் அருகில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்த காரில் வந்த நபரை தேடி வருகின்றனர்.
Be the first to comment