தஞ்சாவூர்: தஞ்சை சங்கமம் என்ற நம்ம ஊரு திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை கண்டு ரசித்தனர்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில், தஞ்சை சங்கமம் என்ற நம்ம ஊரு திருவிழா, அரசு தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.இரண்டு நாள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்றனர். இதில், பாரம்பரிய நாட்டுப்புற கலைகளான நையாண்டி மேளம், கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பம்பையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.தொடர்ந்து, பாரம்பரிய உணவுத் திருவிழாவும் நடைபெற்றது. இதில், சிறு தானிய உணவு வகைகளான கேழ்வரகு கஞ்சி, சிறு தானிய அடை, பயிறு வகைகள், மூலிகை சூப், கருப்பு கவுனி அல்வா, கிச்சடி, கடலை வகைகள் என பாரம்பரிய உணவு வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தனர்.இந்த திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். இதில், ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், எம்பி முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ராஜாராமன், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாச்சியர் நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Be the first to comment