திருப்பத்தூர்: குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், ஆம்பூர் எம்எல்ஏவின் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பாங்கிஷாப், பேஷ்இமாம் நகர், ஸ்டார் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் சில மாதத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஒருமாதத்திற்குள் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று (நவ.1) நடந்த கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து, சாலை மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே, அவ்வழியாக சென்ற ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் காரை வழிமறித்த அப்பகுதியினர், அவரிடம் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அப்பொழுது காரை முற்றுகையிட்ட நபர்களிடம் பேசிய ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், தேவலாபுரம் ஊராட்சி குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்டது என்றும், இது எனது தொகுதி இல்லையெனவும், இருந்தாலும் இப்பிரச்சனை குறித்து குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து சென்றார்.
Be the first to comment