செங்கல்பட்டு: இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ள பயணிகள் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், ஏற்காடு மற்றும் திருவண்ணாமலைக்கு ஆட்டோவிலேயே சென்று அங்குள்ள புராதான சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர்.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழுவினர் கடந்த 4 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்தனர். கடந்த 2 நாட்களாக சென்னையில் தங்கியிருந்து, இன்று (அக்.7) காலை 2 ஆட்டோக்களில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். இவர்களுக்கு தமிழக அரசின் சுற்றுலா வழிகாட்டி மதன் உதவியாக இருந்தார்.முதலில் மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன கற்சிற்பங்களை சுற்றிப் பார்த்த சுற்றுலா பயணிகள், அங்கிருந்து ஆட்டோ மூலம் புதுச்சேரி புறப்பட்டனர். சென்னையில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய இவர்களது பயணம் வரும் 10 ஆம் தேதி மீண்டும் சென்னையிலேயே முடிவடைகிறது.இதற்கிடையே, புதுச்சேரியில், தஞ்சாவூர், ஏற்காடு, திருவண்ணாமலை சென்று அங்கிருந்து இறுதியாக சென்னை செல்கின்றனர். இது குறித்து தமிழக அரசின் சுற்றுலா வழிகாட்டி மதன் கூறுகையில், “ இங்கிலாந்தில் இருந்த வந்த சுற்றுலா பயணிகள், 5 நாட்களும் ஆட்டோவிலேயே சென்று சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதை அவர்கள் சந்தோஷமாக கருதுகின்றனர்” என்றார்.
Be the first to comment