திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தீபம் ஏற்றும் கொப்பரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் போற்றப்படுகிறது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் நவம்பர் 24 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அன்றிலிருந்து தினந்தோறும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பஞ்சமூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் உலா வந்தனர்.கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நாளை மாலை 4 மணிக்கு கோயிலின் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த நிலையில், மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் நிர்வாகம் சார்பில் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
Be the first to comment