தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால், சோத்துப்பாறை அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. சுமார் 126.28 அடி உயரம் உள்ள இந்த அணையின் நீரை பயன்படுத்தி பெரியகுளம், வடுகப்பட்டு, மேல்மங்கலம், குள்ளபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது.அந்த வகையில், சோத்துப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால், கடந்த மாதம் சோத்துப்பாறை அணை அதன் முழுக்கொள்ளவை எட்டியது. அதனால், அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதையடுத்து, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால், அணையின் நீர்வரத்து 20 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால், அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் அளவும் குறைய தொடங்கியது.இந்நிலையில், ‘டிட்வா’ புயல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில், நேற்று முன்தினம் (நவ.29) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது. இதனால், சோத்துப்பாறை அணைக்கு வரும் நீர்வரத்து 278 கன அடியாக அதிகரித்துள்ளது. அப்படி அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரிநீராக வராக நதி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால், பெரியகுளம் சுற்று வட்டாரப் பாசனக் கண்மாய்கள் நிறைந்து வருகிறது. இதனால் பெரியகுளம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Be the first to comment