திருவனந்தபுரத்தில் கேரள சர்வதேச திரைப்பட விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மலையாள திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை பார்வதி, திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், மலையாள நடிகர் மம்முட்டி நடித்த 'கசாபா' திரைப்படத்தில் இடம்பெற்ற பெண் வெறுப்பு உரையாடல்களை அவர் கடுமையாக விமர்சித்தார். மம்முட்டி நடித்த 'கசாபா' படத்தை விமர்சித்ததையடுத்து, நடிகை பார்வதிக்கு எதிராக சமூக வலைதளங்களில் மம்முட்டியின் ரசிகர்கள் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக மிரட்டல்களும் வந்துள்ளன. பார்வதிக்கு சமூக வலைதளங்களில் சகித்துக்கொள்ள முடியாத அளவில் மிரட்டல்கள் வந்துகொண்டேயிருப்பதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பார்வதி போலீஸில் புகார் செய்து உள்ளார். மாநில டிஜிபி லோக்நாத் பெக்ராவிடம் பார்வதி புகார் அளித்தார். நடிகை பார்வதியின் புகார் குறித்து கேரள சைபர் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். இதில், வடக்கன்சேரி பகுதியை சேர்ந்த பிரின்டோ எனும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத அளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்படுவர் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
Be the first to comment