மூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை
  • 5 years ago
சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்தியது காவல் துறை,
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறியவும் இது உதவும் என்று கமிஷனர் விஸ்வநாதன் நம்பிக்கையுடன் சொன்னார்.
குற்றவாளிகளை கண்டறிய சிசிடிவி கேமராக்களை காவல்துறை பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, குற்றங்கள் நடப்பது கேமரா மூலம் தெரிந்த உடனே அந்த இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி ஆக்க்ஷன் எடுக்க போலீஸ் முன்வருவதில்லை. ஞாயிறு அன்று நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
முதல் செயின் பறிப்பு மயிலாப்பூரில் காலை 8 மணிக்கு நடந்தது. இரண்டாவது, ராயப்பேட்டையில். அடுத்து கோட்டூர்புரம். அதை தொடர்ந்து தேனாம்பேட்டை, ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, எம்கேபி நகர் என வரிசையாக நீடித்தது செயின் பறிப்பு சம்பவங்கள். கடைசியாக இரவில் திருமங்கலத்தில் முடிந்தது.
மொத்த செயின்பறிப்பும் இரண்டே ஆசாமிகளால் செய்யப்பட்டது. ஒரே பைக்கில் சென்று, ஒருவன் ஓட்ட, பின்னால் அமர்ந்திருப்பவன் செயினை பறிக்க.. என்று ஒரே ஸ்டைலை பின்பற்றியுள்ளனர். ஒரு இடத்தில் செயின் பறித்ததும் அங்கிருந்து ரொம்ப தூரமெல்லாம் போகவில்லை. ஜஸ்ட் ஓரிரு கிலோமீட்டரில் உள்ள அடுத்த ஏரியாவுக்கு சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.
முதல் சம்பவம் நடந்தபோதே கன்ட்ரோல் ரூமில் இருந்து எல்லா போலீஸ் பெட்ரோல் வண்டிகளையும் அலெர்ட் செய்திருந்தால் அடுத்த ஏதாவது ஒரு இடத்தில் வளைத்து பிடித்திருக்கலாம்.
டெக்னாலஜி பிரமாதமாக கை கொடுக்கிறது. ஆனால், மனிதர்கள் அதற்கு ஈடுகொடுத்து சுறுசுறுப்பாக செயல்பட்டால்தானே பலன் கிடைக்கும்?
சில போலீஸ் அதிகாரிகள் பூசி மெழுகாமல் இந்த எதார்த்தத்தை வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்கள்.
Recommended