அது ஒரு அறுவடைக் காலம்... வாற்கோதுமை கதிர்கள் வெண்பனியில் தலை சாய்த்து அறுவடைக்குத் தயாராய் நிற்கும் குளிர் காலம். நாசரேத்தின் கன்னி மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஒருநாள் கடவுளின் தூதர் கபிரியேல் மரியாளின் முன் தோன்றினார். அருள் நிறைந்த மரியாளே வாழ்க, பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்... என்றார். இந்த திடீர் அறிவிப்பைக் கேட்டு கலங்கி நின்ற மரியாளை, பயப்படாதே மரியாளே, நீர் உன்னதமானவர். ஆண்டவரின் பூரண அன்பையும் அருளையும் நீர் பெற்றுள்ளீர். திருமணத்துக்கு முன்பு ஆண்டவரின் கிருபையால் நீர் ஒரு அதிசயக் குழந்தையைப் பெற்றெடுப்பீர். அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடுவீர். அவரே ஆண்டவரின் குழந்தை. இந்த உலகின் ரட்சகர் அவரே. இந்த உலகை ஆளப்போகும் இறைமகன் அவர். அவரது ஆட்சிக்கு மட்டும் முடிவே இருக்காது என்ற வானதூதரை நோக்கி, இது எப்படி நிகழும் ? நான் கன்னி ஆயிற்றே என்றார்.
கலங்காதே மரியாளே, ஆண்டவரின் வல்லமை உம்மீது நிழலாய் இறங்கும். உமக்குப் பிறக்கும் குழந்தை தூய்மையானவர், ஆண்டவரின் மகன் என்றார் கப்ரியேல். பின்னர், நான் ஆண்டவரின் அடிமை, உம் வாக்குப்படியே எல்லாம் நிகழட்டும் என்றார் மரியாள். உடனே அங்கிருந்து மறைந்து சென்றார் வான தூதர். இந்த நிலையில், திருமணத்துக்கு முன் மரியா கருவுற்றிருப்பது யோசேப்புக்குத் தெரிய வந்தது. யோசேப்பு நேர்மையாளரும் நீதிமானுமாய் இருந்தார். எனவே மரியாளை இகழ்ச்சிபடுத்த விரும்பாமல் மறைவாக விலக்கிட நினைத்தார். அவர் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருக்கையில், வானதூதர் கப்ரியேல் யோசேப்பின் கனவில் தோன்றி, தாவீதின் மகனே, மரியாவை ஏற்றுக் கொள்ள அஞ்சவேண்டாம். அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான் , ஏனெனில் அவர் தம் மக்களை பாவங்களில் இருந்து மீட்டெடுக்கவே இப்படிச் செய்திருக்கிறார் என்றார். இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெற்றெடுப்பார் , அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவார் என ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவையாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து தூதர் பணித்தவாறே மரியாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். அகஸ்டஸ் சீசர், மக்கள் தொகையைக் கணக்கிட கட்டளையிட்டதும், தம் பெயரை பதிவு செய்ய யோசேப்பு, மரியாவோடு யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். அந்நேரம் மரியாவுக்கு பேறுகாலம் வர , விடுதியில் இடம் கிடைக்காததால் மாட்டுத் தொழுவத்தில் தெய்வ மகன் பிறந்தார். குழந்தையை துணிகளால் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார். அப்பொழுது இடையர்கள் வயல்வெளியில் தங்கியருக்கும் போது தூதர் தோன்றி அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி ஒன்று , இன்று ஆண்டவராகிய மெசியா தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார் என கூறினார். பின் இடையர்கள் மரியா , யோசேப்பு குழந்தையும் கண்டார்கள். பின் கடவுளைப் போற்றி புகழ்ந்து கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
Special article on Christmas day and the birth of Jesus.