கோயம்புத்தூர்: பானை மீது நின்ற படி, 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடி கோவை நாட்டிய கலாசேத்ராவை சேர்ந்த 51 மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும், ‘பரத’ கலை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், குடியரசு தினத்தை முன்னிட்டும் உலக சாதனை நிகழ்வு இன்று (ஜன.26) நடைபெற்றது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள ஸ்ரீ சத்யேந்திர சித்தர் பீடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 30 நிமிடங்கள் ஒலித்த இறைவணக்க பாடல்கள், தேவாரம் மற்றும் செம்மொழி ஆகிய பாடல்களுக்கு LKG முதல் பள்ளி, கல்லூரி மாணவிகள் 51 பேர் பானை மீது நின்று பரத நாட்டிய நடனம் ஆடினர்.இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், பானை மீது பரதம் ஆடிய இந்நிகழ்வு ‘குளோபல் உலக சாதனை’ புத்தகத்தில் இடம் பிடித்தது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு உலக சாதனை பதக்கங்கள் வழங்கப்பட்டது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை நாட்டிய கலாஷேத்ரா நிறுவனர் ஏலியா நிஷா, “இந்த சாதனை முயற்சிக்காக மாணவர்கள் சுமார் 6 மாத காலம் தொடர்ந்து பயிற்சி எடுத்தனர். தற்போது மாறிவரும் டிஜிட்டல் உலகில், பரத கலை கற்பதன் அவசியம், பரதநாட்டியம் ஆடுவதால் ஏற்படும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இச்சாதனையை மாணவர்கள் நிகழ்த்தினர்” என்றார்.
Comments