அடகு கடை உரிமையாளர் வீட்டில் இருந்த, 4.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகளை கொள்ளையடித்த வடமாநிலத்தவர் இருவரை, விஜயவாடாவில் போலீசார் கைது செய்தனர்.சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, உள்ளாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 31. இவர், தன் வீட்டருகே சொந்தமாக அடகு கடை நடத்தி வருகிறார்.வழக்கம் போல், சந்தோஷ்குமார், கடந்த 6ம் தேதி, அடகு நகைகளை, வீட்டு லாக்கரில் பூட்டி விட்டு சென்றார். பின், 7-ம் தேதி மதியம் 1:00 மணியளவில் லாக்கரை பார்த்த போது, 13 கிலோ தங்க நகைகள், 65 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், கடையில் இருந்த 'சிசிடிவி' கேமிராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும், வடக்கு இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ரவளி பிரியா, ராயபுரம் சரகம் உதவி ஆணையர் கண்ணன் ஆகியோர் தலைமையில், தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில், அதிகாலை விஜயவாடாவில் பதுங்கி இருந்த இரு கொள்ளையர்களை, ஆர்.பி.எப்., உதவியுடன், தனிப்படை போலீசார் கைது செய்தனர்.