Shamila Daluwatte மனம்பேரி தொடக்கம் வித்யாவரை

  • 9 years ago
மனம்பேரி தொடக்கம் வித்யாவரை
நான் மவுனமாகவே இருந்தேன்

23 மே, 2015 அன்று வெளியிடப்பட்டது
Shamila Daluwatte எழுதிய கவிதையின் மொழிபெயர்ப்பு
மொழிபெயர்பு : நியூட்டன் /புதுமைலோலன்

அவர்கள் மன்னம்பேரியை
பாலியல் பலாத்காரம் செய்து
அவளை உயிருடன் புதைத்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.

பின்னர் அவர்கள்
ககவத்த பெண்களிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல.

நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
நான் நுரிவத்தவில் வாழவில்லை.

பின்னர் அவர்கள்
வடக்கின் மகளீரிடம் வந்தார்கள்
நான் பேசவில்லை
கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி, இசைப்பிரியா
இவர்கள் என் சகோதரிகளல்ல.

பின்னர் அவர்கள்
வேறு தோல் நிறம்கொண்ட
பெண்ணிடம் வந்தார்கள்
கூட்டாய் எட்டுப்பேர்
விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை
பாலியல் பலாத்காரம் செய்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் வெளிநாட்டவள் என்பதால்.

அந்தக கோரக் கும்பல்
ரீட்டா ஜானை
பாலியல் பலாத்காரம் செய்தது
அவளது உடல்
பதினைந்துமுறை குத்தப்பட்டு
மொடேரா கடற்கரையில்
வீசப்பட்டது.
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் ஒரு இந்தியப் பெண் என்பதால்.

அவள் மாலை வேளை
நகைகள் அணிந்து
கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து
வினையை தானே தேடிக்கொண்டாள்.

பின்னர் அவர்கள் விஜேராமவில்
பெண் ஒருவரை பலாத்காரம் செய்தார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் ஒரு விபச்சாரி என்பதால்.

பின்னரும் அவர்கள்
நூற்றுக்கணக்கான கன்னிகளை
பலாத்காரம் செய்தார்கள்
சம்பையின் மதுவுடன்
அக்குரசவிலும் மொனராகலையிலும்
கொண்டாடினார்கள்
நான் பேசவில்லை
ஏனெனில்
எனக்கு அரசியல்வாதிகளுக்கு பயம்.

பின்னர் அவர்கள்
லோகராணியை
பாலியல் பலாத்காரம் செய்து
புனித தலமொன்றில் நிர்வாணமாய்
உடலை வீசியெறிந்தார்கள்

கும்பலாய் அவர்கள்
சரண்யா செல்வராசாவை
பாலியல் பலாத்காரம் செய்தார்கள்
நான் பேசவில்லை.

இன்று அவர்கள்
வித்தியா சிவலோகநாதனை
பாலியல் பலாத்காரம் செய்தனர்
நான் பேசவில்லை
ஏனெனில்
அவள் தமிழிச்சி
புங்குடு தீவு எனும்
சிறு கிராமத்தவள்.

ஒளித்தொகுப்பு தமயந்தி.

Recommended